வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் தனித்துவமாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் முக்கியமான விருதான “பாரதியார் விருது” வழங்கப்படுகிறது. பாடத்திட்டம், வகுப்பறைச் செயல்பாடுகள், கற்பித்தல் முறைகள், பள்ளி மற்றும் மொழி மீதான ஆர்வம், தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள், பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள், மொழிப் போட்டிகள், வரலாறு, இலக்கியம் சார்ந்த தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் பள்ளியைச் சார்ந்த சில முக்கியமான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு “பாரதியார் விருது” வழங்கப்படுகிறது.
பாரதியார் விருது – 2025
கெளதம் சங்கர் : வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு ஒரு மாணவராக இணைந்து, பள்ளியில் பட்டம் பெற்று, இன்று வரையில் தமிழ்ப் பள்ளியில் ஒரு மாணவ ஆசிரியராகத் தொடர்ந்து இணைந்து இருக்கிறார். 10 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளியுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒரே மாணவர் கொளதம் சங்கர். அதுமட்டுமில்லாமல் எல்லா விழாக்களிலும் மிகவும் ஆர்வத்துடன் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இருந்து எல்லாப் பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து இருக்கக் காரணம் – நம் தமிழ் மொழி மீதும் நம் பள்ளி மீதும் அவருக்கும் இருக்கும் ஆர்வம். இத்தகைய அளவுகடந்த ஆர்வத்தைப் போற்றும் வகையில் அவருக்குப் பாரதியார் விருதினை வழங்குவதில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி பெருமை கொள்கிறது.
கிருத்திகா இளம்பரிதி : உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை உள்ளடக்கிய எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வகுப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த புதிய கற்பித்தல் நுட்பகளைக் கொண்டு வந்தவர். தமிழ் தட்டச்சு பயின்று மாணவர்களே உருவாக்கிய திசைகள் என்ற வகுப்பு இதழ் இவரின் தனித்துவமான முயற்சிகளுக்கு ஒரு சான்றாக உள்ளது. பாடத்திட்டத்தை ஒரு புதிய பார்வையுடன் அணுகி புதிய கற்பித்தல் முறைகளைத் தொடர்ந்து வகுப்பிற்குக் கொண்டு வந்து, மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் பயில வித்திட்ட இவரது தனித்துவமான முயற்சிகளுகாக பாரதியார் விருது வழங்கப்படுகிறது. தவிரவும் தமிழ்ப் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே ஒவ்வொரு வாரமும் பாரம்பரிய உடையில் வந்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.
கிருத்திகா சரவணபவன் : தன்னார்வலப் பணி என்பது சவால் நிறைந்த ஒன்று. நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பல பணிகளுக்கு இடையே பள்ளியின் பல முன்னெடுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்றல் என்பது எளிதானது அல்ல. வகுப்பு ஆசிரியர், கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், தமிழ்த்தேனீ பள்ளி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல், வானவில் ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர், கதைக்களம் என பள்ளியின் பல முன்னெடுப்புகளில் ஆர்வத்துடனும், துடிப்புடனும் பங்கேற்கும் இவரது ஆர்வத்திற்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது.
அசுவின் குமார் சம்பத் குமார் : வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மிகவும் சவால் நிறைந்த வகுப்புகளில் ஒன்று உயர் அடிப்படை நிலை வகுப்பு. தமிழ் கற்க சுமார் 10 வயதில் முதன் முதலாக வரும் மாணவர்களை உள்ளடக்கிய இந்த வகுப்பு, மிகவும் வேகமாக செல்லக் கூடிய பாடத்திட்டத்தைக் கொண்டது (Fast-track course ). இந்த வகுப்பிற்கு வரும் மாணவர்களை அரவணைத்து, அவர்களை ஆர்வத்துடன் தமிழ் கற்க வைக்கிறார். தங்களின் சக மாணவர்களுடன் இணைந்து தவறுகளை வேடிக்கையான ”என்றால் என்ன கேள்விகள்” (What if) மூலம் எளிய உதாரணங்களுடன் விளக்குதல், சிலை (Statue), எண்கள், நாட்கள் போன்ற குழுக்களுடன் வேடிக்கையான கல்வி விளையாட்டுகளை விளையாடுதல் போன்ற முறைகளை வகுப்பில் அசுவின் பயன்படுத்துகிறார். கற்பித்தலில் புதிய முயற்சிகளைக் கொண்டு வந்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் அவரது கற்பிக்கும் முறைக்காக பாரதியார் விருதினை பெறுகிறார்.
பாரதியார் விருது – 2024
பாலாசி ஆற்காடு சீனிவாசன் : தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தொடர்ந்து ஆர்வத்துடன் ஆசிரியராகப் பணியாற்றுவது சவால் நிறைந்தது. மாணவர்களுடன் அன்பாகப் பழகி, அவர்களை ஆர்வமுடன் தமிழ் வகுப்புக்குக் கொண்டு வருவது ஒரு தனித்திறமையாகும். அதனைச் சிறப்பாக கடந்த பல வருடங்களாக செயல்படுத்தி பாரதியார் விருதினை பெறுகிறார்.
வெங்கடேஷ் கஜபதி : தமிழ் மொழி மட்டுமில்லாமல் நம் தமிழ்ப் பண்பாட்டினையும் மாணவர்களுக்குக் கொண்டு செல்வதை வள்ளலார் தமிழ்ப் பள்ளி முக்கியமாகக் கருதுகிறது. அந்த நோக்கத்தினை சிறப்பாக செய்வது மட்டுமில்லாமல் வள்ளலாரின் வழியை தன் செயல்பாடுகளால் ஆர்வமுடன் வெளிப்படுத்துவதால் பாரதியார் விருதினை பெறுகிறார்.
சண்முகம் மஞ்சமுத்து : மொழி கற்பித்தல் எப்பொழுதும் கடினமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்களுடன் இனிமையாகப் பழகி, வகுப்பினை கலகலப்பாக வழிநடத்துதல் மாணவர்களை தமிழ்ப் பள்ளிக்கு ஈர்க்கும். அப்படியான இனியமான ஆசிரியராகவும், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும் பாரதியார் விருதினை பெறுகிறார்.
மதியரசி தெய்வநாயகம் : எட்டாம் வகுப்பு, பள்ளியின் இறுதி ஆண்டு என்றாலும், அந்த வகுப்பு மிகவும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய எட்டாம் வகுப்பினை மிகவும் பொறுமையுடனும், அக்கறையுடனும், ஈடுபாட்டுடன் வழிநடத்துவதாலும், பள்ளி சார்ந்த பல கலைநிகழ்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமாகச் செயல்படுவதாலும் பாரதியார் விருதினை பெறுகிறார்.
பாரதியார் விருது – 2023
2023 ஆம் ஆண்டு பாரதியார் விருது பெற்ற ஆசிரியர்கள்
– சங்கீதா இராமகிருஷ்ணன் – தமிழ்த்தேனீ போட்டியில் நம் பள்ளி வெற்றிகள் பெற முன்னோடியாக இருந்தவர். தமிழ்த்தேனீப் போட்டியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்றமைக்குக் காரணமாக இருந்தமையால் பாரதியார் விருதினை பெறுகிறார்.
– ஶ்ரீமதி ஜெயராம் – தமிழ் வாசிப்பு தமிழ்நாட்டிலேயே மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மாணவர்களை தமிழ் வாசிப்பில் ஆர்வம் கொள்ள வலையொளி என்ற முயற்சியைத் தொடங்க காரணமாக இருந்தவர். தமிழ் வாசிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியமைக்காக பாரதியார் விருதினை பெறுகிறார்.
– சரண்யா இராமலிங்கம் – தமிழில் வாக்கியங்கள் எழுதுவதற்கு இலக்கணம் அவசியம். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு எளிமையாக தமிழ் இலக்கணங்களைப் புரிய வைப்பது சவால் நிறைந்தது. இலக்கணங்களை மிகவும் எளிமையாக மாணவர்களுக்கு சரண்யா கற்றுத் தருகிறார். அவரது தனித்துவமான முயற்சிக்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது.
– நடராசன் வைரவன் – வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் அர்பணிப்புடன் பணியற்றிதுடன் மட்டுமில்லாமல் தலையாலங்கானம் போன்ற தனித்துதுவமான வரலாறு சார்ந்த முயற்சிகளுக்காகவும் பாரதியார் விருது பெறுகிறார்.
விருது பெற்ற அனைவருக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்