வள்ளலார் தமிழ்ப் பள்ளி : ஓர் அறிமுகம்

நம் செம்மொழியான தமிழ் மொழியை அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், நம்முடைய குழந்தைகள் தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடி தமிழ் மொழியைக் கற்கவும் பேணி வளர்க்கவும், தமிழ் இலக்கியங்களை அமெரிக்காவில் போற்றிடவும், "தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்" என்ற முழக்கத்துடன் வள்ளலார் தமிழ்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள்

வள்ளலார் தமிழ்ப் பள்ளி தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுகிறது. ஆர்வம் மிக்க தன்னார்வலர்களை ஆசிரியர்களாக பணியாற்ற அழைக்கிறோம்.

வகுப்புகள்

வகுப்புகள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்

வானவில் : பள்ளியின் ஆண்டு இதழ்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் படைப்புகளை ஒவ்வொரு ஆண்டு வெளியிடும் வகையில் “வானவில்” ஆண்டு இதழ் செயல்பட்டு வருகிறது. வானவில் ஆண்டு இதழின் முதல் பதிப்பு 2021 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு.ராஜா அவர்களால் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிகள்

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழர் திருநாள் பொங்கல் திருநாளைச் சார்ந்து மொழிப் போட்டிகள், பள்ளியின் ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சிகள், பள்ளியில் முழுமையாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களைப் பாராட்டும் வகையில் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் பள்ளியில் நடைபெறுகின்றன.

கலை மற்றும் இலக்கியக் குழுக்கள்

பள்ளியில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதுடன் மட்டும் நின்று விடாமல், தமிழர் பண்பாட்டு விழுமியங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய கலை மற்றும் இலக்கியக் குழுக்கள் பள்ளியில் செயல்படுகின்றன. பெற்றோர்கள் இக் குழுக்களில் பங்கேற்கலாம். கலைக் குழு மூலம் நடனம், பறையிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இலக்கியக் குழு மூலம் மாதம் ஒரு புத்தகம் வாசிக்கும் குழு செயல்பட்டு வருகிறது.

தொடக்கம், நோக்கம், வளர்ச்சி...

வள்ளலார் தமிழ்ப் பள்ளி, 2015 ஆம் ஆண்டு, சித்திரைத் திருநாளில், நியூசெர்சியில் தொடங்கப்பட்டது. ஐந்து மாணவர்களுடன் ஒரு வீட்டின் அறையில் தொடங்கப்பட்ட பள்ளி, பிறகு நூலகம், தேவாலயம் போன்ற இடங்களில் உள்ள அறைகளில் இயங்கியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இணையம் மூலமாகப் பள்ளி தொடர்ந்து செயல்பட்டது. தற்பொழுது வெஸ்ட் விண்ட்சர் – பிளைன்ஸ்போரோ பள்ளியில் பல வகுப்பறைகளுடன் பள்ளி இயங்கி வருகிறது.

தமிழ்க் கல்வியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி தனக்கென ஒரு தனி முத்திரையை நியூசெர்சியில் பதித்துள்ளது. தமிழ் மொழியைக் கொண்டாட்டத்துடன் கற்கும் முறையை வள்ளலார் தமிழ்ப் பள்ளி நடைமுறைப் படுத்தி வருகிறது. தமிழ்க் கல்வியை வகுப்பறைகளில் பேச/எழுத/வாசிக்க மட்டுமே கற்கும் முறையை மாற்றி வருகிறது. வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியே நம் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், தமிழிசை சார்ந்த நிகழ்வுகளுடன் இணைத்தே தமிழ்ப் பள்ளி செயல்படுகிறது.



 

பெயர் வள்ளலார் தமிழ்ப் பள்ளி
தொடக்கம் 2015 ஆம் ஆண்டு
நிறுவனர், முதல்வர் திருமிகு.சசிகுமார் ரெங்கநாதன்
துணை முதல்வர் திருமிகு.பொற்செல்வி வேந்தன்
துணை முதல்வர் திரு.அருணகிரி சுப்பிரமணியன்
துணைத் தலைவர் திரு.ராமேஷ் தியாகராஜன்