முழக்கம்

நம் செம்மொழியான தமிழ் மொழியை அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், நம்முடைய குழந்தைகள் தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடி தமிழ் மொழியைக் கற்கவும் பேணி வளர்க்கவும், தமிழ் இலக்கியங்களை அமெரிக்காவில் போற்றிடவும், "தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்" என்ற முழக்கத்துடன் வள்ளலார் தமிழ்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொடக்கம், நோக்கம், வளர்ச்சி…

வள்ளலார் தமிழ்ப் பள்ளி, 2015 ஆம் ஆண்டு, சித்திரைத் திருநாளில், நியூசெர்சியில் தொடங்கப்பட்டது. ஐந்து மாணவர்களுடன் ஒரு வீட்டின் அறையில் தொடங்கப்பட்ட பள்ளி, பிறகு நூலகம், தேவாலயம் போன்ற இடங்களில் உள்ள அறைகளில் இயங்கியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இணையம் மூலமாகப் பள்ளி தொடர்ந்து செயல்பட்டது. தற்பொழுது வெஸ்ட் விண்ட்சர் பள்ளியில் பல வகுப்பறைகளுடன் பள்ளி இயங்கி வருகிறது.

தமிழ்க் கல்வியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி தனக்கென ஒரு தனி முத்திரையை நியூசெர்சியில் பதித்துள்ளது. தமிழ் மொழியைக் கொண்டாட்டத்துடன் கற்கும் முறையை வள்ளலார் தமிழ்ப் பள்ளி நடைமுறைப் படுத்தி வருகிறது. தமிழ்க் கல்வியை வகுப்பறைகளில் பேச/எழுத/வாசிக்க மட்டுமே கற்கும் முறையை மாற்றி வருகிறது. வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியே நம் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், தமிழிசை சார்ந்த நிகழ்வுகளுடன் இணைத்தே தமிழ்ப் பள்ளி செயல்படுகிறது.

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் தற்பொழுது 250க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் பயின்று வருகிறார்கள். 50 தன்னார்வல ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மூன்று வயது மாணவர்களுக்கான மழலைக் கல்வி தொடங்கி முழுமையான தமிழ்க்  கல்வியை  வள்ளலார்  தமிழ்ப்  பள்ளி  வழங்கி  வருகிறது.

தமிழ் மொழி ஒரு பன்முகத் தன்மை கொண்ட மொழி. இரண்டாயிரம் ஆண்டுகள் இலக்கிய வளம் உள்ள செழுமையான மொழி. பழமையான மொழியாக இருந்தாலும் நவீனக் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வளரும் வல்லமை கொண்ட மொழி. அத்தகைய மொழியின் பல்வேறு பரிமாணங்களைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் பள்ளிப் பெற்றோர்களையும் அதிகளவில் பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம். அதன் மூலமாக அவர்களின் திறமைகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறோம். வள்ளலார் இலக்கியக் குழு மூலம் நவீனத் தமிழ் இலக்கியங்களை பெற்றோர்கள் வாசிக்கிறார்கள். வள்ளலார் கலைக் குழு மூலம் நாட்டுப்புறக் கலைகளையும், பறையினையும் பெற்றோர்கள் கற்கிறார்கள். இத்தகையப் பங்கேற்பினால் தமிழ் மொழி மீதான ஈடுபாடு பெற்றோர்களுக்கும் ஏற்படுகிறது. பெற்றோர்கள் மூலம் மாணவர்களுக்கும் இந்த ஆர்வம் கொண்டு செல்லப்படுகிறது. தமிழ் மொழி சார்ந்து ஒரு நீண்ட காலத் தாக்கம் அவர்களின் குடும்பங்களில் நிகழ்கிறது. இத்தகைய மாற்றங்கள் மூலமே தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல முடியும் என வள்ளலார் தமிழ்ப் பள்ளி நம்புகிறது.

வள்ளலார் தமிழ்ப் பள்ளி, மொழியைக் கற்றுக் கொடுப்பதுடன் தமிழர்களையும் ஒன்றாக இணைக்கிறது. சல்லிக்கட்டுப் போராட்டம், ஹார்வேர்ட் தமிழ் இருக்கை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நம் தாய் தமிழ்நாட்டிற்கு உதவுவது எனப் பல்வேறு வகையில் மொழிச் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும், சமூகம் சார்ந்தும் பள்ளி இயங்கி வருகிறது.

நியூசெர்சியில் தமிழர்களைத் தமிழ்க் கற்க வைத்து, தமிழர்களாக இணைக்க வள்ளலார் தமிழ்ப் பள்ளி தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த முயற்சியில் எங்களுடன் இணைய நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்.

தமிழ் அறிவோம். தமிழராய் இணைவோம்…