குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பொங்கல் திருநாள் குறித்து கூற வேண்டியவை
பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஓர் “அறுவடைத் திருநாள்” ஆகும். சாதி, மத பேதங்கள் இல்லாமல் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுவதால் இது “தமிழர் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக சனவரி மத நடுப்பகுதியில் வரும். நான்கு நாட்கள் நடைபெறும் திருநாள் ஆகும். தமிழ் மாதமான “தை” முதல் நாளில் வருவதால் பொங்கல் திருநாள் “தைப் பொங்கல்” என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு, ஐரோப்பிய நாடுகள் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அறுவடைக் காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவதால் இது “அறுவடைத் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது. பொங்கல் என்பது விவசாயத்திற்கு உதவிய இயற்கை, சூரியன் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, கரும்பு, போன்றவை கொண்டு வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்ற உணவுகளைத் தயாரித்து இயற்கைக்குப் படைத்து, இயற்கையையும், சூரியனையும் வழிபடுவது மரபாக கிராமங்களில் பின்பற்றப்படுகிறது. பொங்கல் திருநாளில் பாரம்பரிய விளையாட்டுகளான சல்லிக்கட்டு (ஏறு தாழுவுதல்), சிலம்பம், கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் கிராமங்களில் நடைபெறும்.
பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்கள்:
– போகிப் பொங்கல் – பொங்கல் திருநாளின் முதல் நாள் போகிப் பொங்கல். இந்த நாள் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது.
– தைப் பொங்கல் – தமிழ் மாதமான “தை” முதல் நாளில் வரும் பொங்கல் திருநாள் “தைப் பொங்கல்” அல்லது “சூரியப் பொங்கல்” என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை ஆகும். உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றை படைத்துப் புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ‘ பொங்கலோ பொங்கல்’ என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர். கிராமங்களில் வீடுகளுக்கு வெளியே அடுப்பு வைத்து இதனைக் கொண்டாடுவார்கள்.
– மாட்டுப் பொங்கல் – பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல். ‘பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!’ என்ற முழக்கத்துடன் மாடுகளுக்குப் பொங்கலிட்டு, பொங்கல் ஊட்டுவார்கள். தமிழர்கள் தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக தாங்கள் வளர்க்கும் மாடுகளை கருதுகின்றனர்.
– காணும் பொங்கல் – இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்), வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் பட்டிமன்றம், உறி அடித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
குழந்தைகள் அனைவரும் சேர்ந்து “பொங்கலோ, பொங்கல்” கூறலாமா ?