தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சி
கதைகள் எப்பொழுதுமே மனதை ஈர்ப்பவை. கதைகள் மூலமாகக் குழந்தைகளுக்குத் தமிழைக் கொண்டு செல்ல “சுட்டிகளின் கதைக்களம்” என்ற முயற்சியை ஒவ்வொரு வாரமும் வள்ளலார் தமிழ்ப் பள்ளி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் மூலமாக உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் சார்ந்த சில கதைகளைக் கொண்டு செல்ல, தமிழ்ச்சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் சார்ந்த ஒரு முயற்சியாகச் சில கதைகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்.
இலக்கியத்தை அறிமுகம் செய்வதுடன், தமிழ் வாசிப்பையும் தமிழ்ச்சார்ந்த ஓர் ஈடுபாட்டினையும் இத்தகைய முயற்சிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என்ற நம்ப்பிக்கை எங்களுக்கு உண்டு.
குறுங்கதை : மேடைகள் – பெருந்தேவி
இருபது வருடங்களுக்கு முன்னால் கடலூரில் நாங்கள் வசித்த ஓட்டு வீடு வினோதமானது. இருக்கும் அறைகளிலேயே மிகப் பெரிய, முற்றம் இருந்த சமையலறையில் இருபது மேடைகள் இருந்தன. பால், தயிர் வைக்கத் தலா ஒன்று, வெந்நீர் அடுப்புக்கு, தவலைக்குத் தலா ஒன்று, விளாவத் தண்ணீருக்கு ஒன்று, விறகுக்கு ஒன்று, காப்பிப் பொடிக்கு ஒன்று, பெரிய, சிறிய பாத்திரங்கள், கரண்டிகளுக்குத் தலா ஒவ்வொன்று, வால் பாத்திரங்களுக்கு ஒரு மேடை, மாவடு ஜாடி, மாகாளி ஜாடி, கல் உப்பு கச்சட்டிக்குத் தலா ஒன்று, கடையிலிருந்து வாங்கிவந்திருக்கும் காய்கறி பழங்களோடு அப்பா உட்கார ஒன்று, வாங்க வேண்டிய மளிகை சாமான்கள் பட்டியலுக்கு ஒன்று, வழக்கம்போல அடுப்புக்கு, சமைத்ததை வைக்க இரண்டு, சாமி படங்களுக்கு ஒன்று. ஸ்பூன்கள் வைக்க மேடையில்லை என்று அம்மாவுக்கு ஒரே மனக்குறை. விறகு மேடையில் ஒரு நாள் விறகோடு விறகாகச் சாரைப் பாம்பு படுத்திருந்தது. மாகாளி ஜாடியை ஒருநாள் குட்டி மரநாய் ஒன்று நக்கிக்கொண்டிருந்தது. அப்பா அமர்ந்திருந்த மேடையில் ஒரு நாள் பூசணிக்காயை மடியில் வைத்துக்கொண்டு கடவுள் அமர்ந்திருந்தார்
யானை டாக்டர் – சிறுகதை
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் (சுருக்கப்பட்ட வடிவம். தமிழ்நாடு அரசு பாடநூலில் இருந்து)